Sunday 8 January 2017

ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) வரலாறு !!! Jallikattu History

முனைவர் மு.இளங்கோவன்

ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது.
இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது. பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம்.



பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும் (330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர்.